தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்ட கொரோனா வார்டு மையத்தை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்ட கொரோனா வார்டு மையத்தை அகற்ற கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 March 2021 11:26 PM GMT (Updated: 28 March 2021 11:26 PM GMT)

சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குட்பட்ட குடியிருப்பு உள்ளது. சுமார் 11 பிளாக்குகள் கொண்ட இந்த குடியிருப்பில் 2 ஆயிரத்து 394 வீடுகள் உள்ளன.

இதில் 5 பிளாக்குகளில் உள்ள 872 வீடுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மீதமுள்ள 6 பிளாக்குகள் இன்னும் குடியிருப்புவாசிகளுக்கு ஒதுக்கப்படாத நிலையில், அவை கொரோனா வார்டு மையமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு 25-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், அங்கு கொரோனா வார்டு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், கொரோனா வார்டு மையம் காரணமாக தாங்கள் அச்சம் அடைந்துள்ளதால், தங்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பு அமைத்து கொடுக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வெளியே கொண்டு வந்து வீதியில் வைத்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் மற்றும் மண்டல அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story