அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வர இரட்டைஇலை சின்னத்தில் வாக்களியுங்கள்; வேட்பாளர் தளவாய்சுந்தரம் பிரசாரம்
அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் கூறினார்.
தளவாய்சுந்தரம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரம் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று மாலை கன்னியாகுமரி ஐகிரவுண்டு பகுதியில் பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டபடி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் குடிநீர், சாலை வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் வராது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே வீண் வதந்திகளை பரப்பி வருகின்றனர். எதிர்க்கட்சியினரின் இந்த பொய் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது.
தொழிற்சாலை
கன்னியாகுமரி தொகுதியில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வாழ்க்கை மேம்பாடு அடைய புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். செண்பகராமன்புதூரில் தென்னை பொருள்கள் மதிப்புக்கூட்டு உற்பத்தி மையம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் ஒரு சட்டக்கல்லூரி கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்வேன். ரப்பர் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.குமரி மாவட்டத்தில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகளை பழுது பார்க்க உத்தரவிட வேண்டும் என்று முதல்-அமைச்சரை வற்புறுத்தி உள்ளேன். கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தை சீரமைத்து அதன் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதன் தொழிலாளர்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை அமைத்து கொடுப்பேன்.
3-வது முறையாக
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிந்தித்து செயல்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு 50 சதவீத சலுகை கட்டணம் வழங்கப்படும். கன்னியாகுமரி தொகுதியில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நான் வெற்றி பெற்றதும் கன்னியாகுமரி தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி மற்றும் பேரூராட்சியிலும் அம்மா கிளினிக்குகள் அமைக்கப்படும். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலன் அடைவார்கள்.கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. 3-வது முறையாக உங்களின் பேராதரவுடன் தமிழகத்தில் அ.தி.மு.க.அரசு பொறுப்பேற்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி காட்டு நாயக்கன் தெருவில் அமைந்துள்ள உச்சி மாகாளிஅம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
Related Tags :
Next Story