கிணத்துக்கடவு தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்; விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன் என்று உறுதி
கிணத்துக்கடவு வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர் விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.
*விவசாயிகளுடன் குறிச்சி பிரபாகரன் சந்திப்பு*
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க. சார்பில் குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகிறார். நேற்று இவர் விவசாயிகளை சந்தித்து ஆதாவு திரட்டினார். அப்போது அவர் விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன் என்று உறுதியளித்தார். அவரிடம் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் முதல் கோவை வரை தற்போது பயன்பாட்டில் உள்ள என்.எச். 81 (இதன் பழைய என்.எச்.ஐ.எண் 67) சாலையை விரிவாக்கம் திட்டம் தயாரிக்கப்பட்டு பொங்கலூர் மற்றும் பரமத்தியில் சுங்கச்சாவடி அமைக்கப்படநிலையில் இந்த திட்டம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கரூர் முதல் கோவை வரை பயன்பாட்டில் இருக்கும் என்.எச்.81 சாலைக்கு மிக அருகில் (3 கி.மீ. தூரத்தில்) 6 வழி பசுமை சாலையாக கரூரில் இருந்து காரணம்பேட்டை வரையிலும், அங்கு இருந்து கோவை கிழக்கு புறவழிச்சாலையாக கோவை வரையிலும் பசுமை வழிச்சாலை அமைக்க உத்தேசிக்கப்படுகிறது. இந்த
திட்டத்தில் 6 கி.மீ. மட்டுமே பயண தூரம் குறைகிறது. இந்த என்.எச்.81 சாலை கே.எஸ்.என்.புரம், பல்லடம், பொங்கலூர், அவினாசிபாளையம், காங்கேயம், வெள்ளக்கோவில், தென்னிலை பரமத்தி ஆகிய நகரங்கள் வழியாக கோவை கரூர் நகரங்கள் இணைகிறது.
*விவசாய பேரழிவு*
ஆனால் 6 வழி பசுமை சாலை மேற்கண்ட எந்த நகரங்களையும் இணைக்காமல் பரம்பிக்குளம், ஆழியாறு பி.ஏ.பி. பாசன நிலங்களை அழித்து அமைக்கப்படுகிறது. இது விவசாய பேரழிவாகும். பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு மாற்றாக முன்பு திட்டமிட்ட தற்போது பயன்பாட்டில் உள்ள என்.எச்.81 சாலையின் திருத்திவைக்கப்பட்டு உள்ள பணிகளை தொடங்கி செயல்படுத்த வேண்டும். கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு மாற்றாக எல் அண்டு டி சாலையை 45 மீட்டர் அகலம், 25 கி.மீ. தூரம் விரிவாக்கம் செய்யலாம். மேட்டுப்பாளையம் சாலையில் என்.எச். 67 சக்தி சாலை என்.எச்.209 அவினாசி சாலை என்.எச்.47 ஆகிய இணைப்பு சாலைகளை விரிவாக்கம் செய்தால் பயண தூரம், நேரம், விளைநிலங்கள் சேமிக்கப்படும். எனவே ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை அழித்து கரூர் கோவைக்கு இடையே எந்த நகரங்களையும் இணைக்காமல் பயன்படாத இந்த திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் என்.எச்.81 சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story