இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் எனது சம்பளத்தை மக்களுக்காக செலவு செய்வேன்; அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி
இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் எனது சம்பளத்தை மக்களுக்காக செலவு செய்வேன் என வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி அளித்தார்.
அமைச்சர் வாக்கு சேகரிப்பு
வேதாரண்யம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்த ஜீப்பில் சென்று குரவப்புலம், நெய்விளக்கு, ஆதனூர், கோடியக்கரை, கோடியக்காடு, செம்போடை, தேத்தாகுடி ஆகிய ஊராட்சிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வாக்கு சேகரித்து பேசும் போது கூறியதாவது:-
மண் சாலைகளே இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி 90 சதவீத சாலைகள் தார்ச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. குடிமராமத்து பணி மூலம் ஏரி, ஆறு, குளங்கள் தூர்வாரப்பட்டதால் தற்போது கோடை காலத்திலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் மற்றும் மகளிர் நகை கடன் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்துள்ளார். அதேபோல் பெண்கள் விறகு பொறுக்கி அடுப்பை பற்றவைத்து கஷ்டப்படாமல் இருக்க ஆண்டுக்கு 6 சிலிண்டர், துணி துவைப்பதற்கு வாஷிங்மெஷின், முதியோர் உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களுக்கு அம்மா சீர்வரிசை என 164 திட்டங்களை மக்களுக்கு அறிவித்து விட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்தித்து வருகிறார்.
ரூ.2,500 கோடியில் வளர்ச்சி பணி
வேதாரண்யம் தொகுதியில் ரூ.2,500 கோடியில் வளர்ச்சிப் பணிகள் செய்துவிட்டுதான் உங்களை சந்திக்கிறேன். மேலும் மக்கள் பணி செய்ய இரட்டை இலைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எதிர்க்கட்சி வேட்பாளர் உங்களுக்கு என்ன செய்தார். அவரை மூன்றாவது முறையாக தோல்வி அடைய செய்யுங்கள் என்றார்.மேலும் என்னை வெற்றி பெற செய்தால் எனது குடும்பத்தாருக்கு இனி எனது சம்பளத்தில் செலவு
செய்யப்போவதில்லை. எனது வருமானத்தை மக்களுக்காகவே செலவு செய்யப்போகிறேன். வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழகத்திலேயே அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளில் வேதாரண்யம் ஒன்று என வரலாறு படைக்க வேண்டும் என்றார்.
இந்த பிரசார நிகழ்ச்சியில் கட்சி முக்கிய பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story