குரங்கனி அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி


குரங்கனி அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 29 March 2021 5:22 PM IST (Updated: 29 March 2021 5:22 PM IST)
t-max-icont-min-icon

குரங்கனி அருகே, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலியானான்

தென்திருப்பேரை:
குரங்கனி அருகே குடும்பத்தினருடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானான்.
கோவிலுக்கு சென்றனர்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் உருமன்களத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நிசான் முரளிகார்த்திக்(வயது6). 
 இவர்களது குடும்ப கோவில் ஏரல் அருகே வாழவல்லானில் உள்ளது. நேற்று முன்தினம் பங்குனி உத்திரத்தன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆறுமுகம் குடும்பத்தினருடன் வாழவல்லான் கோவிலுக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காலையில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் அருகே உள்ள மர நிழலில் குடும்பத்தினர் சமையல் செய்து சாப்பிட்டுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கினான்
பின்னர் ஆறுமுகம் குடும்பத்தினர் 10 பேர் தாமிரபரணி ஆற்றுக்கு சென்ற குளித்துக் கொண்டிருந்தனர். குடும்பத்தினருடன் நிசான் முரளி கார்த்திக்கும்  குளித்து கொண்டிருந்தான். 
அனைவரும் குளித்து முடித்து விட்டு கரைக்கு திரும்பியபோது, நிசான் முரளி கார்த்திக் தண்ணீருக்குள் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தண்ணீரில் நீந்தி சென்றபோது, சிறுவன் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அவனை உறவினர்கள் மீட்டு தென்திருப்பேரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீசார் விசாரணை 
டாக்டர் பரிசோதனை செய்து விட்டு சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அவனது உடலை பார்த்து உறவினர்கள ்பதறி துடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து ஆழ்வார்திருநகரி போலீசார் அங்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story