தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கொடைக்கானல் மலைப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா இ.பெ.செந்தில்குமார் வாக்குறுதி
பழனி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார்.
கொடைக்கானல்,
கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் கிராம பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல், அண்ணாசாலை, நாயுடுபுரம், கலையரங்கம், அப்சர்வேட்டரி, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். முன்னதாக குறிஞ்சிஆண்டவர் கோவில், தேவாலயங்களுக்கு வந்த பக்தர்கள், கிறிஸ்தவர்களிடம் தி.மு.க.வின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:-
கொடைக்கானலில் 350-க் கும் மேற்பட்ட ஓட்டல்கள் சீல் வைக்கப்பட்டதால் 15 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அவர்களில் பலர் வெளியூருக்கு சென்றுவிட்டனர். எனவே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டல் உரிமையாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்திடம் ஓட்டல் சீல் வைக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் எவ்வித முயற்சியும் எடுக்காமல், தற்போது அதுபற்றி பொய்யான வாக்குறுதிகளை கூறுகின்றனர்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் என்ற சுனாமி அலை வீசி வருகிறது. இதை யாராலும் தடுக்க முடியாது. விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. அதன்பின் கொடைக்கானல் மலைப்பகுதி மக்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும். மேலும், கொடைக்கானலில் ஆண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும், கொடைக்கானல்-பழனி மலைப்பாதை தரம் உயர்த்தப்படும். கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி, தி.மு.க. நகர செயலாளர் முகமது இப்ராகிம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், நகர நிர்வாகிகள் முனியாண்டி, முகமது நயினார், பிச்சை, முன்னாள் பிரதிநிதிகள் டார்லிங்அப்துல்லா, அஜ்மல்கான், ராஜாராணிராஜா, மாரிமுத்து, சையது, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் கனிராஜா, ம.தி.மு.க. நகர செயலாளர் தாவுது, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆண்டி, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சின்னு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story