புள்ளம்பாடி ஒன்றியத்தில் மாட்டுவண்டியில் சென்று பிரசாரம் செய்த தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன்


புள்ளம்பாடி ஒன்றியத்தில் மாட்டுவண்டியில் சென்று பிரசாரம் செய்த தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன்
x
தினத்தந்தி 29 March 2021 1:50 PM GMT (Updated: 29 March 2021 1:50 PM GMT)

லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கல்லக்குடி, 

புள்ளம்பாடி தெற்கு ஒன்றியத்தில் புதூர்பாளையம், வாணாதிரையான்பாளையம், கோவாண்டகுறிச்சி, வடுகர்பேட்டை, ஆரோக்கியபுரம், காமராஜபுரம், ஆலம்பாக்கம், திருவள்ளுவர்நகர், விரகாலூர், திண்ணகுளம், ஆலம்பாடிமேட்டூர், தங்கசாலை ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும்போது, “அடித்தட்டு மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் தேவையான திட்டங்களை தீட்டி, அதன் மூலம் அவர்கள் பயன்பெற்று வாழ்வில் முன்னேற பாடுபட்ட இயக்கம் தி.மு.க. ஆகும். 

கருவறை முதல் கல்லறை வரை பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவித்து செயல்படுத்தி வரும் இயக்கமான தி.மு.க.வை ஆதரித்து, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு மாடு வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்” என்றார். மேலும் கோவண்டா குறிச்சி கிராமத்தில் மாட்டுவண்டியில் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசாரத்தின் போது, புள்ளம்பாடி முன்னாள் ஒன்றிய தலைவர்கள் ஜெயபிரகாஷ், பத்மாமருதை, தி.மு.க. வடக்கு ஒன்றியசெயலாளர் செல்வராசா, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் சேவியர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உள்பட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story