திண்டுக்கல் தொகுதியில் வழிபாட்டு தளங்களில் வாக்கு சேகரித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்


திண்டுக்கல் தொகுதியில் வழிபாட்டு தளங்களில் வாக்கு சேகரித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
x
தினத்தந்தி 29 March 2021 9:17 PM IST (Updated: 29 March 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வழி பாட்டு தளங்களில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 12-ந்தேதி முதல் திண்டுக்கல் தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் மாநகராட்சி வார்டு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

அதன்படி நேற்று திண்டுக்கல்லில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கடேசன், சதீஷ், மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஸ்கண்ணா உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் பாரதிபுரம் சாய்பாபா கோவிலுக்கு சென்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழிபட்டார். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களிடம் அ.தி.மு.க.வின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார்.

அதையடுத்து சவேரியார்பாளையம் வெள்ளிமலை முருகன் கோவிலுக்கு அமைச்சர் சென்றார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாக தலைவர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளர் (மேற்கு) சிவபிரசாந்த் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். அதையடுத்து அங்கு வந்த முருக பக்தர்களுக்கு, அமைச்சர் அன்னதானம் வழங்கினார். 

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் தான் திண்டுக்கல் தொகுதி மேலும் வளம் பெறும். எனவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு கொண்டார். இந்த பிரசாரத்தில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story