பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
வடமதுரை மாரியம்மன் கோவிலில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
வடமதுரை:
வடமதுரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
இதையொட்டி தினமும் பல்வேறு மண்டகப்படி தாரர்களின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதற்காக வடமதுரையில் உள்ள மங்கம்மாள் கேணி அருகே, 15 அடி சுற்றளவில் பள்ளம் தோண்டப்பட்டு நெருப்பு மூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து வடமதுரை ஏழுமலையான் கோவில் பூசாரியை பக்தர்கள் அழைத்து வந்தனர்.
ஏழுமலையான் அலங்காரத்தில் ஒரு கையில் தீப்பந்தம், மறு கையில் சாட்டையுடன் அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு பூசாரி ஆசி வழங்கினார்.
அதன்பின்னர் ஏழுமலையான் கோவில் பூசாரி முதலில் பூக்குழியில் இறங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து மின் அலங்கார ரதத்தில் வடமதுரை நகரின் முக்கிய வீதிகளில் அம்மன் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுகன்யா மற்றும் வடமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story