முருகன் கோவில் தேரோட்டம்


முருகன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 29 March 2021 5:44 PM GMT (Updated: 29 March 2021 5:44 PM GMT)

ராமநத்தம் அருகே முருகன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே லெக்கூரில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஓடையில் இருந்து பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் தேர்திருவிழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்ங்காரத்தில் முருகபெருமான் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

வைத்தியநாதபுரம்

இதேபோல் வைத்தியநாதபுரம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தது.அதனை தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை  வைத்தியநாதபுரம் மற்றும் ஆலத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர். 

Next Story