தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் வருகை


தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் வருகை
x
தினத்தந்தி 29 March 2021 11:26 PM IST (Updated: 29 March 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் 535 பேர் வருகை தந்துள்ளனர்

விழுப்புரம், 

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற  6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2-ந் தேதி எண்ணப்படுகிறது. 
இத்தேர்தலில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் வகையிலும் பாதுகாப்பு பணியில் மாநில போலீசாருடன் துணை நிலை ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இதற்காக ஏற்கனவே இம்மாத தொடக்கத்திலேயே துணை ராணுவத்தினர் தமிழகம் வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து கூடுதலாக துணை நிலை ராணுவ வீரர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

துணை ராணுவத்தினர் வருகை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,957 முதன்மை வாக்குச்சாவடி மையங்களிலும், 411 துணை வாக்குச்சாவடி மையங்களிலும் என 2,368 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தலில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறும், அமைதியான முறையில் நடைபெறவும் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே துணை ராணுவத்தினர் 82 பேர் விழுப்புரம் வரவழைக்கப்பட்டு அவர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து உதவி கமாண்டன்ட் மணீஷ்யாதவ் தலைமையில் 6 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவத்தினர் 535 பேர் ரெயில் மூலம் சென்னைக்கு வந்து பின்னர் அங்கிருந்து பஸ் மூலமாக நேற்று முன்தினம் விழுப்புரம் வந்தனர்.

இவர்கள் தற்போது விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகளிலும் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இதனிடையே அவர்கள், உள்ளூர் போலீசாருடன் இணைந்து பதற்றம் நிறைந்த, மிகவும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் கொடி அணிவகுப்பும் நடத்தி வருகின்றனர்.

Next Story