வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சின்னசேலம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை - ரூ.33 லட்சம் அபராதம் விதித்தும் விழுப்புரம் கோர்ட்டு உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சின்னசேலம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆர்.பி.பரமசிவம் (வயது 72). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை சின்னசேலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இந்த புகார்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வரப்பெற்றதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த 1997-ம் ஆண்டில் பரமசிவம் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில் 17.6.1991 முதல் 13.5.1996 வரையுள்ள காலத்தில் பரமசிவம், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.28 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்திருப்பது தெரியவந்தது.
விசாரணை
மேலும் பரமசிவத்திற்கு அவரது மனைவி பூங்கொடியும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். இதன் அடிப்படையில் பரமசிவம், அவரது மனைவி பூங்கொடி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த 2.4.1998 அன்று வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன் பின்னர் இவ்வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கடந்த 2017-ல் பரமசிவத்தின் மனைவி பூங்கொடி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அவரது பெயர், வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
4 ஆண்டு சிறை
இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த 102 பேரிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
அந்த தீர்ப்பில், எம்.எல்.ஏ. என்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.33 லட்சத்து 4 ஆயிரத்து 168-ஐ அபராதமாக விதித்தும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
சொத்துக்கள் பறிமுதல்
மேலும் அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலகட்டத்தில் அவரது பெயரிலும் மற்றும் அவரது மனைவி பூங்கொடி, மகன்கள் மயில்வாகனம், பாபு மற்றும் கோவிந்தன் ஆகியோரின் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் ஏற்கனவே ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story