கொரோனா பாதிக்கப்பட்ட 5 வீடுகளில் தகரம் வைத்து அடைப்பு
கொரோனா பாதிக்கப்பட்ட 5 வீடுகளில் தகரம் வைத்து அடைப்பு.
கோவை,
கோவை சத்திசாலை சிவானந்தபுரத்தில் தி.ரு.வி.க. நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் மத்தம்பாளையத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகிய இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தி.ரு.வி.க. நகரில் உள்ள 5 வீடுகளில் மரக்கட்டைகள் வைத்தும், தகரம் வைத்தும் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டு தூய்மைப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் முதியவர்கள், குழந்தைகள் என பலரும் வெளியே வரமுடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் இன்றியும் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் தகரம் வைத்து அடைத்து உள்ளனர். கடந்த காலங்களில் ஒரு வீட்டில் தகரம் வைத்து அடைத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுக்கவும், ஆட்களை நியமிப்பார்கள்.
ஆனால் எங்கள் பகுதியில் வீடுகளில் தகரம் வைத்து அடைத்தும் நோட்டீஸ் ஒட்டியும் அதிகாரிகள் சென்றனர். அதன்பிறகு யாரும் இங்கு வந்து பார்க்க வில்லை.
எங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். ஆனால் அதில் எங்களுக்கு தொற்று இல்லை. இங்கு முதியவர்கள், இதய நோயாளிகள் பலர் உள்ளனர். அவர்கள் அவசர சிகிச்சைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறோம்.
எனவே தகரம் வைத்து அடைக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும். கொரோனா தொற்று இல்லாதவர்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story