நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அன்னவாசல்:
பூச்சொரிதல் விழா
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு பூச்செரிதலுடன் தொடங்கியது.
இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், நார்த்தாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பூக்களை தட்டுகளில் சுமந்தவாறும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும் எடுத்து சென்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களைகொட்டி வழிப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பால்குட ஊர்வலம்
முன்னதாக புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், வேல் குத்தியும், கரும்பு தொட்டில் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பால்குடங்களில் எடுத்து வந்த பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பொங்கல் விழா
இதைதொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து 11-ந்தேதி பொங்கல் விழாவும், 12-ந்தேதிதேர் திருவிழாவும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். மேலும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Related Tags :
Next Story