கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 30 March 2021 12:23 AM IST (Updated: 30 March 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கரூர் சமூக செயல்பாட்டாளர் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 
காவிரி ஆறு சென்னை உள்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், 15 மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. இப்படிப்பட்ட காவிரி ஆற்றின் குறுக்கே, உச்ச நீதிமன்ற உத்தரைவயும் மீறி சட்ட விரோதமாக கர்நாடக அரசு மேகதாது என்னும் இடத்தில் மேட்டூர் அணையின் கொள்ளளவிற்கு சுமார் 90 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கும் வகையில் அணை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடி இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளது. இந்திய அரசும், கர்நாடகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்தாமல் துணை நின்று வருகிறது.
தடுத்து நிறுத்த வேண்டும்
தற்போது கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கி மேகதாதுவில் அணை வேலை தொடங்கியுள்ள நிலையில் இதை கண்டித்து தமிழக அரசு எவ்வித எதிர்ப்பும் காட்டாமலும், இதை தடுக்க சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளது. கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு மறைமுகமாக தமிழக அரசு துணைபோய் வருகிறது என கருதுகிறோம். எனவே தமிழக அரசு மேகதாது அணை கட்டும் கர்நாடக பா.ஜ.க.வை அரசை எதிர்த்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 
இதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
போராட்டம்
பின்னர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திற்கு வருகைதரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Next Story