விபத்தில் சிறுவன் இறந்த வழக்கு: லாரி டிரைவருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


விபத்தில் சிறுவன் இறந்த வழக்கு: லாரி டிரைவருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 29 March 2021 7:19 PM GMT (Updated: 29 March 2021 7:19 PM GMT)

நாங்குநேரி அருகே விபத்தில் சிறுவன் இறந்த வழக்கில் லாரி டிரைவருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நெல்லை:
நாங்குநேரி அருகே விபத்தில் சிறுவன் இறந்த வழக்கில் லாரி டிரைவருக்கு 3½ ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுவன் பலி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 43). இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது மோட்டார் சைக்கிளில் பேரன் சுடலை என்ற சுரேசை (4) அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வானமாமலை மகன் லாரி டிரைவர் முத்து என்ற பேச்சிமுத்து லாரியை ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த சிறுவன் சுரேஷ் பரிதாபமாக இறந்தான். 

இந்த விபத்து முன்விரோதத்தால் ஏற்பட்டது. பேச்சிமுத்து திட்டமிட்டு எனது மோட்டார் சைக்கிளில் மோதி சுரேசை கொலை செய்தார் என நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் சுப்பையா புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்தனர்.

3½ ஆண்டு சிறை

இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நசீர் அகமது தீர்ப்பு கூறினார். அதில் பேச்சிமுத்து முன்விரோதம் காரணமாக விபத்தை ஏற்படுத்த வில்லை. எனவே இந்த கொலை வழக்கு விபத்து வழக்காக மாற்றப்பட்டுள்ளது. 

விபத்து ஏற்படுத்திய பேச்சிமுத்துவிற்கு 3½  ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிவலிங்கமுத்து ஆஜராகி வாதாடினார்.

Next Story