ஆ.ராசா உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்


ஆ.ராசா உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 30 March 2021 1:28 AM IST (Updated: 30 March 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் தாயார் பற்றி ஆ.ராசா அவதூறு பேசியதாக கூறி, அவரின் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

திருச்சி, மார்ச். 30-
முதல்-அமைச்சரின் தாயார் பற்றி  ஆ.ராசா அவதூறு பேசியதாக கூறி, அவரின் உருவபொம்மையை எரித்து அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
உறையூர்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. அவதூறாக பேசியதாக கூறியும், அவரை கண்டித்தும் திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் சாலையில் நேற்று உறையூர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் என்.எஸ்.பூபதி தலைமையில் அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்  ஆ. ராசாவின் உருவப்படத்தையும், உருவ பொம்மையையும் எடுத்து வந்த அவர்கள் அதற்கு திடீரென தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
லால்குடி
இதேபோல் லால்குடி ஒன்றிய செயலாளர்கள் தெற்கு சூப்பர் நடேசன், வடக்கு வக்கீல் அசோகன் ஆகியோர் முன்னிலையில் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எம்.பாலன், நகர செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.டி.எம். அருண் நேரு, முன்னாள் அவைத் தலைவர் அன்பில் தர்மதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது, திடீரென்று ராசாவின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவெறும்பூர்
திருவெறும்பூர் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் என்ற  கோபால்ராஜ் தலைமை தாங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சதீஷ்குமார், வட்ட செயலாளர் எஸ்.ஆர் ரவி, சூரியூர் ராஜா கும்பக்குடி கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணப்பாறை
இதேபோல் மணப்பாறையில் அ.தி.மு.க. நகர செயலாளர் பவுன்.ராமமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆ.ராசா  மீது போலீசார் கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றும், கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story