மதுரையில் புதிதாக நேற்று 39 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக நேற்று 39 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 March 2021 1:55 AM IST (Updated: 30 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் புதிதாக நேற்று 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மதுரையில் மீண்டும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

மதுரை, 
மதுரையில் புதிதாக நேற்று 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மதுரையில் மீண்டும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்தநிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சீபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங் களில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.
இதுபோல், மதுரையிலும் நேற்று 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மதுரையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. நேற்று கொரோனா  உறுதி செய்யப்பட்டவர்களில் 31 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுபோல் சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.
நேற்றுடன் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 729 ஆக உள்ளது. இதுபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 252 ஆக உயர்ந்து இருக்கிறது. மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல், அதில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. அதன்படி மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 21 ஆயிரத்து 12 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 19 பேர் மட்டுமே குணமடைந்தனர்.
உயிரிழப்புகள்
மதுரையில் கடந்த 4 தினங்களான தினமும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து வருகிறார். அதன்படி மதுரையில் நேற்றும் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார். வரும் காலங்களிலும் கொரோனா அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story