அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன்  விருத்தாசலம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்  டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2021 9:09 PM GMT (Updated: 29 March 2021 9:09 PM GMT)

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

விருத்தாசலம்,
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தேர்தல் பிரசாரம்

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று விருத்தாசலம் பாலக்கரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மாம்பழம் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்து பேசியதாவது:-
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதல்-அமைச்சராக உள்ளார். எனவே அவர் மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக வர வேண்டும். அதற்கு நீங்கள் விவசாயி மகனான கார்த்திகேயனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இந்த தேர்தல் விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையே நடக்கும் தேர்தல். இதில் விவசாயி வெற்றி பெறவேண்டும். ஸ்டாலினுக்கு கலைஞர் மகன் என்ற ஒரு தகுதி மட்டுமே உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயி என்ற தகுதி உள்ளது. 

குறுநில மன்னர்கள்

தி.மு.க. ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு குடும்பம். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின். அவருக்கு பிறகு உதயநிதி. இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க.விற்கு ஒரு குறுநில மன்னர்கள் உள்ளனர். அங்கும் அவர்களுடைய வாரிசுகள் தான் அடுத்தடுத்து பதவி வகித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு கிளை செயலாளராக இருந்து, இன்று தமிழக முதல் அமைச்சராக வந்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம் இருக்கும். தி.மு.க.வை ஒருபோதும் ஆட்சியில் விட்டுவிடக்கூடாது. விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் முயற்சியால் ரூ.193 கோடியில் தொழில் தடம் சாலை விருத்தாசலத்தில் இருந்து மங்கலம்பேட்டை வரை அமைய உள்ளது. ரூ.471 கோடியில் என்.எல்.சி.யில் இருந்து விருத்தாசலம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான விருத்தாசலம் மாவட்டமாக அறிவிக்கப்படும். ஆகவே எனது தம்பி கார்த்திகேயனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Next Story