அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை
நாகர்கோவிலில் அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கட்டு, கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கட்டு, கட்டாக பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருமான வரித்துறை சோதனை
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு 24 மணி நேரமும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் வருமான வரித்துறையும் வங்கிகளில் அதிக பண பரிமாற்றம் தொடர்பாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அப்போது சந்தேகம் ஏற்படும் நபர்களின் வீட்டுக்கு அதிரடியாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் நாகர்கோவில் ஜெகநாதன் தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை நடத்தினார்கள். வீட்டின் வெளியே கோட்டார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உறவினர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
கட்டு, கட்டாக பணம்
இந்த சோதனையானது அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து பகல் 12 மணிக்கும் மேலாக சோதனை நடந்தது. சோதனையின் போது வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் சிக்கியது. அதோடு முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் காரில் ஏற்றி கொண்டு சென்றனர். பாலசுப்பிரமணியனின் மகன் ராஜேஷ் என்ஜினீயர் ஆவார். அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
இவர் வரி ஏய்ப்பு செய்ததால் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் தேர்தல் நேரத்தில் வீட்டில் சோதனை நடந்ததால் பணப்பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற ரீதியில் விசாரணை நடக்கிறது. அமெரிக்க என்ஜினீயர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story