மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போது இடுப்பில் சொருகி இருந்த பீர்பாட்டில் குத்தி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போது இடுப்பில் சொருகி இருந்த பீர்பாட்டில் குத்தி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 30 March 2021 5:01 AM IST (Updated: 30 March 2021 5:01 AM IST)
t-max-icont-min-icon

இடுப்பில் சொருகி இருந்த பீர்பாட்டில் குத்தி தொழிலாளி பலி

சேலம்:
சேலம் அம்மாபேட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 34), கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சரவணன் தாதகாப்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பீர் பாட்டிலை வாங்கி பேண்டுக்குள் இடுப்பில் சொருகினார். பின்னர் அவர் தனது உறவினரான பிரபுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சீலநாயக்கன்பட்டி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல பிரபு முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது தடுமாறி அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். இதில் வண்டியின் பின்னால் இருந்த சரவணனின் இடுப்பில் சொருகி இருந்த பீர் பாட்டில் உடைந்து அவருடைய வயிற்றில் குத்தி கிழித்தது. உடனே படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சரவணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story