நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வர சாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்


நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வர சாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 30 March 2021 5:02 AM IST (Updated: 30 March 2021 5:02 AM IST)
t-max-icont-min-icon

லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வர சாமி கோவில் தேரோட்டம்

மேச்சேரி:
நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மசாமி-சோமேஸ்வர சாமி கோவில் தேரோட்டம் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
லட்சுமி நரசிம்மசாமி-சோமேஸ்வர சாமி கோவில்
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சாமி -சோமேஸ்வர சாமி கோவில் உள்ளது. இக்கோவில் சைவ-வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அன்னம், சிம்மம், சேஷம், அனுமந்தம், யானை, கருடன், ரிஷபம் உள்பட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. 
நேற்று முன்தினம் லட்சுமி நரசிம்மர் சாமி - சோமேஸ்வர சாமி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரில் அமர்த்தும் வைபவம் நடந்தது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை கோவில் முன்பு இருந்து தொடங்கியது. முதல் தேரில் விநாயகரும், 2-வது தேரில் சோமேஸ்வரர் சவுந்தரவல்லி அம்பாளும், பெரிய தேரில் லட்சுமி நரசிம்ம சாமி, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்துடன் வீற்றிருந்தனர். 
இதையடுத்து 3 தேர்களும் நிலையில் இருந்து புறப்பட்டது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டம் 5 நாட்கள் நடைபெறும். நேற்று நடந்த முதல் நாள் தேரோட்ட முடிவில், தாரமங்கலம் பிரிவு சாலையில் தேர் நிறுத்தப்பட்டது. 
இன்று
இன்று (செவ்வாய்க்கிழமை) தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து பஸ் நிலையம் வரையும், நாளை (புதன்கிழமை) பஸ் நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்புத்தெரு பிரிவு வரையும் தேரோட்டம் நடைபெறும். 
தொடர்ந்து 2-ந் தேதி தோப்புத்தெரு பிரிவில் இருந்து கோவில் முன்புள்ள நிலைக்கு வந்து சேரும். விழாவின் நிறைவாக, 3-ந் தேதி இரவு 9 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Next Story