சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு, ஆய்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் பறக்கும் படையினருக்கு கலெக்டர் உத்தரவு
தேர்தல் கண்காணிப்பு, ஆய்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்
சேலம்:
சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு, ஆய்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பறக்கும் படையினருக்கு கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு கூட்டம்
சேலம் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு பறக்கும் படை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்கள் மேற்கொள்வதற்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வேட்பாளரின் அதிகபட்ச செலவினமாக ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரை தேர்தல் செலவினங்களை மேற்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு பணிகளை
11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 99 பறக்கும் படைகள் குழுக்களும், 99 நிலை கண்காணிப்பு குழுக்களும் என மொத்தம் 198 பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் அனைத்தும் தினமும் தங்களது கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் நாள் நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில் தங்கள் தேர்தல் தொடர்பான ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக மேற்கொண்டு வாகன சோதனைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகள் மற்றும் வாகன சோதனைகளில் மெத்தனம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அனைத்து தேர்தல் விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி நியாயமாகவும், நேர்மையாகவும், சிறப்பாகவும் தேர்தல் நடத்திட அனைத்து பணியாளர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் ராமன் பேசினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன், தனி தாசில்தார் (தேர்தல்) சிராஜூதீன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story