வருகிற அ.தி.மு.க. ஆட்சி பெண்களுக்கான அரசாக அமையும்; மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உறுதி


வருகிற அ.தி.மு.க. ஆட்சி பெண்களுக்கான அரசாக அமையும்; மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உறுதி
x
தினத்தந்தி 30 March 2021 8:15 AM IST (Updated: 30 March 2021 8:21 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று கிழக்கு தொகுதி உட்பட்ட ஒத்தவீடு, பாரதிபுரம், மஸ்தான்பட்டி, கிழக்கு அண்ணாநகர், சங்குநகர், மாந்தோப்பு, வண்டியூர் மந்தை திடல், தீர்த்தக்காடு, சவுராஷ்டிராபுரம், கவுன்டன்கால், நேதாஜிநகர், மங்களகுடி, லேக்ஏரியா, டி.எம்.நகர் ஆகிய பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அவரை பூ தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

பின்னர் வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பொதுமக்கள் மத்தியில் பேசும் போது, நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மதுரைக்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளேன். அதனால் நான் தற்போது வாக்கு சேகரிக்க வரும்போது நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள பல்வேறு குறைகளை கூறி வருகிறீர்கள். அதனை அனைத்தும் நான் தேர்தலில் வெற்றி பெற்று உறுதியாக நிறைவேற்றுவேன். இந்த பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை வசதி, சாலை, குடிநீர் வசதி செய்து தருவேன். அதே போன்று தொகுதியின் பாதுகாப்பு கருதி அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும். மேலும் வண்டியூர் பகுதியில் பஸ் போக்குவரத்து சீர் செய்து, அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படும்.

ஆகவே உங்களுக்கு வேண்டிய திட்டங்களை செய்து தர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பெண்களுக்கு வாசிங்மெஷின், தாலிக்கு தங்கம், நிதியுதவி உடன் புதிதாக மணமக்களுக்கு சீர்வரிசையாக கட்டில், மெத்தை, பட்டு சேலை, வேட்டி, பாத்திரங்கள் என அனைத்து பொருட்களும் வழங்கப்படும். இது தவிர பெண்கள் பஸ்சில் 50 சதவீத கட்டணத்தில் எங்கும் செல்லலாம். இதன் மூலம் வருகிற அ.தி.மு.க. ஆட்சி பெண்களுக்கான அரசாக அமையும் என்பதில் ஜயமில்லை. எனவே நீங்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.

Next Story