பாபநாசம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லா தீவிர வாக்கு சேகரிப்பு


பாபநாசம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லா தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 30 March 2021 4:00 AM GMT (Updated: 30 March 2021 3:56 AM GMT)

பாபநாசம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஜவாஹிருல்லா வாக்கு சேகரிப்பு
பாபநாசம் சட்டசபை தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாபநாசம் தொதியில் உள்ள கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசியதாவது:-
 பாபநாசம் தொகுதியில் உள்ள கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, திருமலைராஜன் ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களில் நெய்வேலி காட்டாமணக்கு செடி கொடிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வாரப்படும். 

சாலை வசதி
கரைகள் பலப்படுத்தப்பட்டு சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தஞ்சாவூர் -கும்பகோணம் சாலை அகலப்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தபடும். பாபநாசம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை முழுமையாக தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டு போக்குவரத்து போலீசார் நியமனம் செய்வதற்கு அரசிற்கு பரிந்துரைக்கப்படும். பாபநாசத்தில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடமும், காவலர்களுக்கான நவீன குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மீண்டும் சென்னைக்கு பஸ்
பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் வந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாபநாசத்தில் இருந்து ஏற்கனவே சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு ஆவண செய்யப்படும்.பாபநாசம் பகுதி பொதுமக்கள் நலன் கருதி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தரப்படும். நிரந்தர மருத்துவர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். வேட்பாளருடன் தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் லோகநாதன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், தியாக. சுரேஷ்குமார், பி.எஸ்.குமார், ஒன்றியக் குழு தலைவர்கள் கலைச்செல்வன், சுமதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Next Story