படுகர் இன உடையணிந்து நடிகை விந்தியா பிரசாரம்


படுகர் இன உடையணிந்து நடிகை விந்தியா பிரசாரம்
x
தினத்தந்தி 30 March 2021 10:11 AM IST (Updated: 30 March 2021 10:11 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கப்பச்சி டி.வினோத்தை ஆதரித்து, படுகர் இன உடையணிந்து நடிகை விந்தியா பிரசாரம் மேற்கொண்டார்.

கோத்தகிரி

கோத்தகிரியில் கப்பச்சி டி.வினோத்தை ஆதரித்து, படுகர் இன உடையணிந்து நடிகை விந்தியா பிரசாரம் மேற்கொண்டார். 

தேர்தல் பிரசாரம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று அவர் கோத்தகிரி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் படுகர் இன மக்களை போல உடை அணிந்து இருந்தார்.
பிரசாரத்தின்போது நடிகை விந்தியா பொதுமக்களிடையே பேசியதாவது:-
கடந்த முறை தி.மு.க. தோல்விக்கு ஆ.ராசா மீதான ஊழல் வழக்கு காரணமானது. தற்போது தி.மு.க. டெபாசிட் இழக்க போகிறது. 

இதற்கு அவரது வாய் காரணமாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இல்லாததால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லை.

எண்ணற்ற திட்டங்கள்

தேர்தல் நெருங்கிவிட்டால், மு.க.ஸ்டாலின் பல வேஷங்கள் போட்டு வாக்கு சேகரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறும் என்று சொன்னதை செய்து காட்டியது, அ.தி.மு.க. அரசு. 

மேலும் விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கொரோனா காலத்தில் மக்கள் பசியில் தவிக்கக்கூடாது என்பதற்காக உதவி கேட்பதற்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் விலையில்லா உணவு பொருட்கள் வழங்கியவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தார்.

மக்களுக்கான தேர்தல் அறிக்கை

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்றிக்கானது அல்ல. அது மக்களுக்கானது. அவர்களின் முன்னேற்றத்துக்கானது. இந்த தொகுதியில் கப்பச்சி டி.வினோத் வெற்றி பெற்றதும், அடுத்த சில நாட்களிலேயே உங்கள் வீடு தேடி வாஷிங் மிஷின் உள்ளிட்ட அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை கொண்டு சேர்ப்பார். இவ்வாறு அவர் பேசினார். 

இதில் குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, கிழக்கு ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் கம்பட்டி குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுப்ரமணி, கிழக்கு ஒன்றிய தலைவர் சிவராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தேவராஜ், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ராஜன் புடியங்கி ரஜனி, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வடிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே.மாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story