வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் நான் வெற்றி பெற்றால் தலைஞாயிறை தனி தாலுகாவாக உருவாக்குவேன்; அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி


வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் நான் வெற்றி பெற்றால் தலைஞாயிறை தனி தாலுகாவாக உருவாக்குவேன்; அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி
x
தினத்தந்தி 30 March 2021 10:30 AM IST (Updated: 30 March 2021 10:15 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் நான் வெற்றி பெற்றால் தலைஞாயிறை தனி தாலுகாவாக உருவாக்குவேன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்குறுதி அளித்தார்.

அமைச்சர் தீவிர பிரசாரம்
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில்  போட்டியிடும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று தலைஞாயிறு ஒன்றியத்தில் மணக்குடி, வடுகூர், ஆய்மூர், பெருமழை, திருவிடைமருதூர், அருந்தவம்புலம், பண்ணத்தெரு, நத்த பள்ளம், புத்தூர், நீர்மூளை உள்ளிட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பட்டாசு வெடித்தும், அமைச்சருக்கு மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். . முன்னதாக மணக்குடி கடைத்தெருவில் நடந்து சென்று வர்த்தகர்கள், பொதுமக்களிடம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆதரவு 
திரட்டினார். 


அப்போது அவர் கூறியதாவது:-

தலைஞாயிறு தனி தாலுகா
நான் தலைஞாயிறு ஒன்றியத்திற்கு பல கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக இந்த தொகுதியில் நான் மீண்டும் வெற்றி பெற்றால் தலைஞாயிறு தனி தாலுகாவாக உருவாக்கப்படும். பிரிஞ்சு மூலை, ஆலங்குடியில் கதவணைகள் கட்டப்பட்டுள்ளது. தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரகுளத்தில் நான்கு கரைகளிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைஞாயிறு பேரூராட்சியில் அனைவருக்கும் விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. பழையாற்றங்கரையில் ரூ.3 கோடியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தலைஞாயிறு பஸ் பயணிகள் நிழலகம் அமைக்கப் பட்டுள்ளது.

ரூ.2,500 கோடியில் திட்ட பணிகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிக்கு 132 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வடுகூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.1¼ கோடியில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. 
தலைஞாயிறு ஒன்றியத்தில் துளசாபுரம், மகாராஜபுரம், சாக்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிதாக கொள்ளிடம் குடிநீர் திட்ட இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேதாரண்யம் பகுதியில் இதுவரை ரூ.2,500 கோடியில் நலத்திட்ட பணிகள் நடைபெற்று உள்ளது. இதுவரை 70 ஆண்டுகளில் செய்யாத பணிகளை இந்த 5 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது.பிரதான சாலையில் உள்ள குழாய் பாலங்கள் அகற்றப்பட்டு 145 இடங்களில் கல்வெட்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 16 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுனாமி மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பதற்காக நிரந்தரமான அடுக்குமாடி குடியிருப்புகள் 6 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

துறைமுகம் அமைக்கும் பணி
வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடியிலும், ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியிலும் படகுகளை நிறுத்துவதற்கு துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரடியம் புலத்தில் 83 கோடியில் மீன்வள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.570 கோடியில் அடப்பாறு, வெள்ளாறு, பாண்டவையாறு, வளவனாறு, அரிச்சந்திர ஆறு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. இதைப்போல பல்வேறு நலத்திட்டங்கள் வேதாரண்யம் தொகுதியில் தொடர எனக்கு இரட்டை இலையில் வாக்களியுங்கள். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் இரட்டை இலைக்கு வாக்கு அளிக்க வேண்டுகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின் போது மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், ஒன்றிய செயலாளர்கள் அவை.பாலசுப்பிரமணியன், தங்க சவுரிராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரமணி, முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் வாசுதேவன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சாமி, மாவட்ட கவுன்சிலர் இளவரசி தங்கராசு, ஒன்றிய குழு உறுப்பினர் ரம்யா, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி, ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்க செயலாளர் செங்குட்டுவன், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் ஜெஸ்டின் ராஜ், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட இணைச்செயலாளர் திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story