இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; ஒரத்தநாடு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி


இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்; ஒரத்தநாடு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி
x
தினத்தந்தி 30 March 2021 11:00 AM IST (Updated: 30 March 2021 10:57 AM IST)
t-max-icont-min-icon

இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என மக்களின் கோரிக்கை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என்று ஒரத்தநாடு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.

வைத்திலிங்கம் பிரசாரம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர் நேற்று ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட தஞ்சை ஒன்றியத்தில் உள்ள பத்திரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.மாலையில் சூரக்கோட்டை, கண்டிதம்பட்டு, கொல்லாங்கரை, விளார் ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மரபுகோட்டை மேட்டுக்குடி தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஆட்சிக்கு வந்ததும்...
அதை பெற்றுக்கொண்ட வைத்திலிங்கம், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு இலவசமாக வீடு மற்றும் வீட்டுமனை கட்டித்தரப்படும் என உறுதி அளித்தார். அதேபோன்று துறையூர் கிராமத்தில் பல ஆண்டுகாலமாக கோவில் கட்டப்படாமல் உள்ளதால் அந்த கோவிலை சரிசெய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கட்டாயமாக கோவிலை புதுப்பித்து அல்லது புதிதாக கட்டித் தரப்படும் என தெரிவித்தார்.பின்னர் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசுகையில், நான் 3 முறைவெற்றி பெற்று ஒருமுறை வெற்றி வாய்ப்பை 
இழந்தாலும் எனக்கு எம்.பி. பதவி கொடுத்து இந்த பகுதிமக்களுக்கு பணியாற்ற உத்தரவிட்டவர் ஜெயலலிதா. நான் பதவியில் இருந்த காலத்தில் தஞ்சை மாவட்டம் 75 ஆண்டு காலம் காண முடியாத பல கல்வி நிறுவனங்களை, ஜெயலலிதாவிடம் கேட்டு பெற்றேன்.

விவசாயக்கடன் தள்ளுபடி
மக்களுக்கான செயல்படும் ஜெயலலிதா அரசு தொடர வேண்டும். என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் அவர்களின் தலைவர்களை சந்திக்கவே 4 நாட்கள் ஆகும். நான் இந்த இயக்கத்தில் 4 தலைவர்களில் ஒருவராக உள்ளேன். நான் வெற்றி பெற்றால் முதல்-அமைச்சரை சந்தித்து உங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். ஆனால் எதிர்த்து போட்டியிடுபவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளருடன் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், தஞ்சை ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், துணை செயலாளர் குளிச்சப்பட்டு கலியமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, சூரக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.

Next Story