பெண் இனத்துக்கு பெருமை சேர்க்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரசாரம்


பெண் இனத்துக்கு பெருமை சேர்க்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரசாரம்
x
தினத்தந்தி 30 March 2021 4:03 PM IST (Updated: 30 March 2021 4:03 PM IST)
t-max-icont-min-icon

பெண் இனத்துக்கு பெருமை சேர்க்க அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மலைக்கோட்டை,

திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் நேற்று காலை உலகநாதபுரம், அந்தோணியார் கோவில்தெரு, ஜெய்லானி தெரு, ராஜாதெரு உள்ளிட்ட தெருக்களில் நடந்து சென்றும், பிரசார வாகனத்தில் சென்றும் வாக்குசேகரித்தார்.  ஏரிக்கரை ரோட்டில் அவர் பிரசார வாகனத்தில் நின்றபடி பேசியதாவது:-

அரசியலில் இப்படி தான் வாழ வேண்டும் என்று எங்களுக்கு அண்ணாதுரை சொல்லி கொடுத்திருக்கிறார். ஆனால், அதையெல்லாம் மனதில் கொள்ளாமல், முதல்-அமைச்சரையும், அவரது தாயாரையும், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால், முதல்-அமைச்சர் கலங்கியுள்ளார். தி.மு.க.வினருக்கு இது புதிது இல்லை. ஆனால், முதல்-அமைச்சரின் 92 வயது தாயாரை இழிவுபடுத்தி பேசியிருக்கின்றனர் தி.மு.க.வினர்.

பெண்களை தெய்வமாக மதித்தவர் எம்.ஜி.ஆர். பெண்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. அவர்கள் வழியில் வந்தவர்களை விமர்சித்து தான் ஓட்டு பெற வேண்டும் என்ற நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. எனவே, மக்கள் ஒரு நொடி சிந்தித்து முதல்-அமைச்சரின்  தாயாருக்கே இந்த கதி, சாதாரண மக்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும். இவர்களை நம்பி ஓட்டளித்தால் தமிழகத்தின் அமைதி கெட்டுவிடும். பெண் இனத்துக்கு பெருமை சேர்க்க அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாலையில் 37-வது வார்டுக்கு உட்பட்ட செம்பட்டு, குடியானதெரு, புதுத்தெரு, பட்டத்தம்மாள் தெரு, வயர்லெஸ் ரோடு, குலவாய்பட்டி, உடையான்பட்டி ஆகிய தெருக்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கொளுத்தும் வெயிலில் நடந்தே சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி, இளைஞரணி செயலாளர் முத்துகுமார், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, பாசறை செயலாளர் இலியாஸ், துணை செயலாளர் ஷாஜகான், வட்ட செயலாளர்கள் செல்லப்பா, விநாயகமூர்த்தி, த.மா.கா. கே.டி.தனபால் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  உடன் சென்றனர்.

Next Story