தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம்: நத்தம் பகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. உறுதி


தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம்: நத்தம் பகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. உறுதி
x
தினத்தந்தி 30 March 2021 10:53 AM GMT (Updated: 30 March 2021 10:53 AM GMT)

தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டார் அப்போது நத்தம் பகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

செந்துறை, 

நத்தம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எம்.ஏ.ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. நேற்று நத்தம் அருகே உள்ள பஞ்சயம்பட்டி, குட்டுப்பட்டி, மாணிக்கம் கடை, ஆலம்பட்டி, களத்துப்பட்டி, அரவங்குறிச்சி, சேத்தூர், குடகிப்பட்டி, மணக்காட்டூர், செந்துறை, பழனிபட்டி, அடைக்கனூர், பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். 

அப்போது அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நத்தம் தொகுதிக்கு போதிய நிதியை அரசு ஒதுக்கவில்லை. இந்த முறை தி.மு.க. ஆட்சி அமையும். நானும் எம்.எல்.ஏ.வாக வருவேன். அதன்பின் நத்தம் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும். நத்தம் பகுதி மலைக்கிராமங்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  ஏற்படுத்தப்படும். மாணவ&மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு நத்தத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்.

எனவே மக்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, கணேசன், நிர்வாகிகள் ராஜகோபால், வக்கீல் சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர் பழனியப்பன், கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் தவச்செல்வம், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் சித்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story