ஒட்டன்சத்திரம் தொகுதி, தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அர.சக்கரபாணி தீவிர வாக்கு சேகரிப்பு - மக்கள் ஆரவார வரவேற்பு


ஒட்டன்சத்திரம் தொகுதி, தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அர.சக்கரபாணி தீவிர வாக்கு சேகரிப்பு - மக்கள் ஆரவார வரவேற்பு
x
தினத்தந்தி 30 March 2021 10:56 AM GMT (Updated: 30 March 2021 10:56 AM GMT)

ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றிய பகுதியில் தி.மு.க.வின் வாக்குறுதிகளை கூறி அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளராக தி.மு.க. கொறடாவும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான அர.சக்கரபாணி மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக தொகுதிக்கு உட்பட்ட ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 
அவர் பொதுமக்களிடையே பேசியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளாக நான் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். இதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த வாக்காளர்களாகிய உங்களுக்கு முதலில் கோடான கோடி நன்றியை கூற கடமைபட்டிருக்கிறேன். அவ்வாறு எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பல எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். மேலும் பல திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நிறைவேற்றப்பட உள்ளன.

குறிப்பாக தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கிராமப்புற மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இப்படி விடுபட்ட திட்டங்கள் பல உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும்  மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி  அமைந்தபின் தங்குதடையின்றி நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ள குடும்பத்தலைவிக்கு உதவித்தொகை ரூ.1000, இலவச பஸ்பாஸ், வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு, கிராமப்புறங்களில் இலவச குடிநீர் இணைப்பு, பெட்ரோல்&டீசல் விலை குறைப்பு, கொரோனா நிவாரண தொகை என எண்ணற்ற திட்டங்கள் அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் கட்டாயம் நிறைவேற்றப்படும். எனவே நீங்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து என்னை மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story