தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஆத்தூர் அணையில் இருந்து பொன்னிமாந்துறை பகுதிக்கு குடிநீர் - முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. உறுதி
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஆத்தூர் அணையில் இருந்து பொன்னிமாந்துறை பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
கன்னிவாடி,
ஆத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று அவர் காமாட்சிபுரம், சின்னபொன்னிமாந்துறை, பெரிய பொன்னிமாந்துறை, குருவப்பநாயக்கன்பட்டி, குட்டியபட்டி, சூசைபட்டி, அனுமந்தராயன்கோட்டை, மேலப்பட்டி, வட்டப்பாறை, அளவாச்சிபட்டி, அனுப்பபட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். முன்னதாக அவருக்கு மக்கள் மலர்தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
காமாட்சிபுரத்தில் அவர் பேசியதாவது:-
ஒரு காலத்தில் காமாட்சியுரம், பொன்னிமாந்துறையில் விளையும் காய்கறிகள் திண்டுக்கல்லுக்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டது. அப்பேற்பட்ட பகுதிக்கு தற்போது குடிநீர் இல்லாமல் உள்ளது. இங்கு தோல் தொழிற்சாலைகள் உள்ளதால் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. ஆகவே ஆத்தூர் அணையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் குடிநீரை காமாட்சிபுரம், பொன்னிமாந்துறை பகுதிக்கும் நிச்சயமாக வாங்கித் தருவேன். இதற்கான அனுமதி தீர்மானம் போட்டு சென்னை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அதை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பொன்னிமாந்துறை பகுதியில் மேற்கொண்ட பிரசாரத்தில் பேசியதாவது:-
பொன்னிமாந்துறையில் உப்பு அரித்துப் போன நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இங்கு வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் மூலம் 2 கிலோமீட்டர் தூரத்தில் விட ஏற்பாடு செய்யப்படும். குட்டியபட்டியில் திருமண மண்டபம், கோவில் முன்பு பேவர்பிளாக் கற்கள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு நிறைவேற்றப்படும். எனவே மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். அதையடுத்து அதே பகுதியை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ராஜ்குமார் தி.மு.க.வில் இணைந்தார்.
பிரசாரத்தில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி, அம்பை ரவி, விவேகானந்தன், புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அருணாச்சலம், காங்கிரஸ் முருகானந்தம், ஐ.ஏ.எஸ். கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் ராயப்பன், ரமேஷ், காமாட்சிபுரம் சவரிமுத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன், மாவட்ட பிரதிநிதி எல்லை ராமகிருஷ்ணன், ஆத்தூர் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி தலைவர் நிர்மலாஇன்பா, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வெள்ளையம்மாள் ராஜாமணி, கரிசல் ஜோசப், புதுப்பட்டி கிளைகழக செயலாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story