தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் மாற்றம்


தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் மாற்றம்
x
தினத்தந்தி 30 March 2021 3:46 PM GMT (Updated: 30 March 2021 3:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு தேர்தல் செலவின பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு தேர்தல் செலவின பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 பேர் நியமனம்
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3 தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமனம் செய்து இருந்தது. 
பார்வையாளர் மாற்றம்
தற்போது திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் ராகேஷ் தீபக், சொந்த காரணங்களுக்காக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஊருக்கு திரும்பி உள்ளார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிக்கு குண்டன் யாதவும், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு சுரேந்திரகுமார் மிஸ்ராவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உரிய தேர்தல் பணிகள் தொடர்பாக புகார்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story