சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வைகோ பேச்சு


சட்டமன்ற தேர்தலில்  தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 30 March 2021 3:58 PM GMT (Updated: 30 March 2021 3:58 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று கோவில்பட்டியில் வைகோ கூறினார்.

கோவில்பட்டி:
சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
வைகோ பிரசாரம்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. மதச்சார்ப்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பிரசாரம் செய்தார். 
அப்போது அவர் பேசியதாவது:- நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அன்றைய பிரதமரிடம், கோவில்பட்டியில் 3 மேம்பாலங்கள், விருதுநகர் - கொல்லம் அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்தேன். இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
234 தொகுதிகளிலும் வெற்றி
இங்கு போட்டியிடும் அமைச்சர் 10 ஆண்டுகளில் என்ன செய்துள்ளார்?.  கோவில்பட்டிக்கு தி.மு.க. கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தது. அமைச்சர் எந்த பணியும் செய்தது கிடையாது. 
தி.மு.க. அணி தான் வெற்றி பெறும். 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். முதல்-அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்கும்போது, கோவில்பட்டி தொகுதிக்கு தேவையான திட்டப்பணிகளை செய்து கொடுப்பார். எளிய தொண்டன் தான் மக்கள் பணிக்கு வர வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 38 மாவட்டங்களுக்கு 1,451 வாக்குறுதிகளை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்கள்
டெல்லியில் 120 நாட்களுக்கு மேல் போராடும் விவசாயிகளை மோடி கண்டுகொள்ளவில்லை. இதற்கு காரணம் அதானி, அம்பானி, ஸ்டெர்லைட் ஆலைக்காரர்கள். இவர்களுக்காக தான் இந்த சட்டங்களை கொண்டு வந்தார். இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்கள். 
இந்த சட்டங்களை அ.தி.மு.க. ஆதரித்தது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவுடன், உழவர் சந்தைகளுக்கு மீண்டும் உயிருட்டப்படும். வேளாண்மைத்துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும். வாழை, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதர விலை தரப்படும். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தி, அதன் சம்பளம் ரூ.300 ஆக உயர்த்தப்படும். 
பள்ளிகள் தரம் உயரவில்லை
இலவச மின்சாரம் தொடரும். மும்முனை மின்சாரம் கேட்பவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும்.
மின்சார வாரியம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதற்கு மின்சார இழப்பு, ஊழல் தான் காரணம். கடந்த 5 ஆண்டுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு கோடி 41 லட்சத்து 716 கோடி ரூபாய், ஆனால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளின் தரம் உயரவில்லை.
தி.மு.க. ஆட்சி
இப்போது மோடி அரசு மின்சார திருத்தச்சட்டம் கொண்டு வருகிறது. அதன்படி நரேந்திர மோடி ஆட்சி தொடருமானால் இலவச மின்சாரம் இருக்காது.  இப்போது உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறை செல்வது உறுதி. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று  தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story