எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா


எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 March 2021 4:38 PM GMT (Updated: 30 March 2021 4:38 PM GMT)

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர், 

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (வயது 63) மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறிஞ்சிப்பாடி பேரூர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா வைரசுக்கான அறிகுறி இருந்ததால் அவர்,  காட்டுமன்னார்கோவில் அருகே ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்தார்.

கொரோனா உறுதி

பின்னர் அவர் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பிரசாரம் செய்த போது, மதியம் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பிரசாரத்தை பாதியில் முடித்து விட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த ஆஸ்பத்திரியிலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவு நேற்று காலை வெளியானது. அதிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அந்த ஆஸ்பத்திரியிலேயே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கலக்கம்

இதற்கிடையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு கொரோனா உறுதி என்ற செய்தி அறிந்ததும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், பிரசாரத்திற்கு சென்ற கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இது பற்றி கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் உடல் நிலை நன்றாக இருக்கிறது. இருப்பினும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவரது வீட்டில் வேலை செய்த நபர்கள், தொடர்பில் இருந்த 5 பேருக்கு முதற்கட்டமாக பரிசோதனை செய்ய இருக்கிறோம் என்றார்.

Next Story