உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1½ லட்சம்-6 செல்போன்கள் பறிமுதல்


உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1½ லட்சம்-6 செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 March 2021 10:28 PM IST (Updated: 30 March 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்தையும், 6 செல்போன்களையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:
நாகையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்தையும், 6 செல்போன்களையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாகை சட்டசபை தொகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
நேற்று நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் பறக்கும் படை அதிகாரி மீனாட்சி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். 
ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் பறிமுதல்
இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பொரவச்சேரியைச் சேர்ந்த அறிவழகன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல நாகூர் தெத்தி அருகே நாகூர்-நாகை சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகூரில் இருந்து ஆழியூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது போதிய ஆவணங்கள் இன்றி ரூ.62 ஆயிரத்து 500 எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தெத்தி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.62 ஆயிரத்து 500-ஐ பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
6 செல்போன்கள் பறிமுதல்
இதேபோல நாகை நாலுகால் மண்டபம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 6 செல்போன்களை எடுத்து சென்றது தெரிய வந்தது. 
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், நாகை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சதாசிவம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தையும் பறக்கும் படை அதிகாரிகள், நாகை தாசில்தார் முருகுவிடம் ஒப்படைத்தனர்.

Next Story