மயிலம் அருகே மொபட்ட மீது மோதிய லாரி தீ பற்றி எரிந்தது ஆசிரியை படுகாயம்
மயிலம் அருகே மொபட்ட மீது மோதிய லாரி தீ பற்றி எரிந்தது. இதில் ஆசிரியை ஒருவா் படுகாயம் அடைந்தாா்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி மகாலட்சுமி(வயது 32). இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து தனது ஊருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாதிரிபுலியூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அவர் சென்ற போது, பின்னால் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி மகாலட்சுமி மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
ஆனால் அவர் ஓட்டி வந்த மொபட் லாரியில் சிக்கி சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.
அப்போது, மொபட்டில் இருந்த பெட்ரோல் டேங்க் நசுங்கியதில் திடீரென தீப்பிடித்தது. இதில் மொபட், லாரி ஆகியன பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. உடன் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு, அதில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் படுகாயங்களுடன் தப்பிய மகாலட்சுமி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story