காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை பகுதிகளில் கார்களில் கொண்டு சென்ற ரூ.40.78 லட்சம் பறிமுதல்
காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை பகுதிகளில் கார்களில் கொண்டு சென்ற ரூ.40.78 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாதேசன் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் நோக்கி வந்த காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.
அந்த காரில் ரூ.38 லட்சத்து 40 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், காவேரிப்பட்டணம் கோவிந்தப்பா முதலியார் தெருவை சேர்ந்த கால்நடை தீவன விற்பனையாளர் விமல் (வயது 42) என்பதும், நிலம் வாங்கி விற்கும் முகவராக செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. மேலும், பன்னிஅள்ளி ஊராட்சியில் உள்ள நிலம் விற்பனை செய்யப்பட்டதற்கான தொகையை உரியவர்களிடம் ஒப்படைக்க சென்றதும் தெரிந்தது.
பணம் பறிமுதல்
இருப்பினும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ.38.40 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தும் அலுவலரான கற்பகவள்ளியிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே உள்ள கமலாபுரம் கூட்ரோடு அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சக்தி தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 300 கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஊத்தங்கரை அருகே சின்னதள்ளபாடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.65 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story