கோரைப்புல் அறுவடை பணி தீவிரம்


கோரைப்புல் அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 March 2021 11:49 PM IST (Updated: 30 March 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே கோரைப்புல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடியை விரிவாக்கம் செய்ய வேளாண்மை துறை உதவிகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொறையாறு:
செம்பனார்கோவில் அருகே கோரைப்புல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடியை விரிவாக்கம் செய்ய வேளாண்மை துறை உதவிகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரைபுல் சாகுபடி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் விவசாய தொழிலும், அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. தற்போது விவசாயிகள் கரும்பு, உளுந்து, பாசிப்பயறு, வாழை, மக்காச்சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பாகற்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம், காலகஸ்திநாதபுரம், திருவிடைக்கழி, விசலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோரைபுல் சாகுபடி செய்திருந்தனர். கோரைப்புல் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே தற்போது கோரைப்புல் அறுவடை பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். 
இதுகுறித்து காலகஸ்திநாதபுரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
அறுவடை பணி
செம்பனார் கோவில் வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாய் தயாரிக்க கோரை புல் சாகுபடி செய்து இருந்தோம். தொடர்ந்து ஏற்பட்ட பருவமழை காரணமாக சற்று காலதாமதமாக கோரைப்புல் நடவு செய்தோம். தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இப்போது அறுவடை பணியை செய்து வருகிறோம்.
இந்த கோரைபுல் பாய் தயாரிக்க வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆரணி உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அறுவடை செய்யும் இடத்திற்கு நேரடியாக வந்து கோரை புல்லை கொள்முதல் செய்து செல்கின்றனர். கோரைப்புல் பாய் மனிதர்களின் உடல் உஷ்ணத்தில் இருந்து பாதுகாக்கிறது. மனிதர்களுக்கு பலவித நன்மைகள் ஏற்படுகிறது. நோய் நொடியில் இருந்து பாதுகாக்கிறது. 
நஷ்டம் ஏற்படுகிறது
கோரைக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு இந்த கிழங்கை பயன்படுத்துவர். சிறியோர் முதல் பெரியோர் வரை நம் முன்னோர்கள் காட்டிய வழியில் அனைத்து பொதுமக்களும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத் கோரைப்பாயை பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
தற்போது பொதுமக்கள் பிளாஸ்டிக் வயர் பாய்யை நாடி செல்கின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள் கோரை புல்லை குறைந்த விலைக்கு கேட்கின்றனர். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அரசு கோரை புல் சாகுபடியை விவசாயிகள் விரிவாக்கம் செய்ய வேளாண்மை துறை மூலம் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story