அ.தி.மு.க. பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும், இல.கணேசன்
அ.தி.மு.க. பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
திருவண்ணாமலை,
மார்ச்.31-
அ.தி.மு.க. பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்- அமைச்சர் ஆவார். எதிரணியை சேர்ந்தவர்கள் தெய்வத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.
நாங்களோ தெய்வத்திற்கு ஆதரவாக இருக்கும் கூட்டணி. நடைபெறுவது தர்ம யுத்தம். தர்மத்தின் பக்கம் அணி திரண்டு இருக்கிறோம்.. இதில் பழனிசாமி அர்ச்சுனன் போல இருக்கிறார். எதிரில் கவுரவர் அணி நிற்கிறது. அதில் ஸ்டாலின் துரியோதனன் போல இருக்கிறார். வெற்றி என்பது தர்மத்திற்கா? அதர்மத்திற்கா? என்றால் தர்மத்திற்கு தான் வெற்றி. ஆலய வளாகத்தில் இருந்து சொல்கிறேன் தெய்வத்தின் சாட்சியாக எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்.
கனவு காண்கிறார்
வருமான வரித்துைறக்கு தகவல் கிடைத்தால் அவர்கள் யார் வீடு என்று கவலைப்பட மாட்டார்கள். ஆளுங்கட்சியா?, எதிர் கட்சியா? என்று பார்க்காமல் வந்த தகவல் உண்மையானதா என்று விசாரணை செய்வதற்காக சோதனை நடத்துவார்கள். வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டால், அந்த நபர் குற்றவாளி என்று கிடையாது. இதனால் அரசியல் பின்னணி, காழ்ப்புணர்ச்சி என்று கிடையாது.
ஒரு அணியை சேர்ந்தவர்களை மட்டும் சோதனை நடத்தப்படவில்லை. தகவலின் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக அரசாங்கத்தை குறை சொல்ல கூடாது.
தமிழ்நாட்டில் நான் தான் முதல்-அமைச்சர் என்று ஒருவர் கனவு காண்கிறார். பேராசையோடு இருந்து வருகிறார். இது புதுசு அல்ல. மீண்டும் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சியமைக்கும் என்பதை தான் எப்பொழுதும் வலியுறுத்துகிறோம். அ.தி.மு.க. மட்டுமே பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வேண்டும். அது எங்களுடைய முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story