கற்கள் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு
வாலாஜா அருகே கற்கள் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
வாலாஜா தாலுகா அனந்தலை கிராமம் அருகே உள்ள மலையை சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
இங்கு மலையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பாறைகள் ராட்சத எந்திரங்கள் மூலம் உடைத்து ஜல்லி, எம் சாண்ட் என பிரித்தெடுக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வாலாஜாவை அடுத்த செங்காடு மோட்டூர் பகுதியில் உள்ள குவாரியில் 10-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் டன் கணக்கில் கற்கள் ஏற்றிவந்த லாரிகளை நேற்று முன்தினம் மாலை அனந்தலை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இந்த வழியை பயன்படுத்த கூடாது என்று பலமுறை தெரிவித்தும் எதற்காக வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டிரைவர்கள் லாரியை ஓட்டிச் செல்ல முயன்றனர். ஆனால் பொதுமக்கள் சாலையின் நடுவே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி லாரிகளை வழிமறித்தனர். தொடர்ந்து லாரி டிரைவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை ஓட்டி சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story