பழனி அருகே வாகன சோதனையில் ரூ.78 லட்சம் பறிமுதல்


பழனி அருகே வாகன சோதனையில் ரூ.78 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 31 March 2021 1:16 AM IST (Updated: 31 March 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், ஆவணங்கள் இன்றி மினி வேனில் கொண்டு சென்ற ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெய்க்காரப்பட்டி:
பழனி அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், ஆவணங்கள் இன்றி மினி வேனில் கொண்டு சென்ற ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். இதில், அந்த வேனில் ரூ.78 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. 
ரூ.78 லட்சம் பறிமுதல் 
இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில், அவர்கள் வங்கி ஊழியர்கள் என்றும், பழனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து அதே வங்கியின் கோவை கிளைக்கு இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த ரூ.78 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
பின்னர் அந்த பணத்தை ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் அலுவலரான சசிகுமாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன்பிறகு அந்த பணம் ஒட்டன்சத்திரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.  வாகன சோதனையில் ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story