அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை
வாக்கு எண்ணும் மையத்தில் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரத்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி வரிசையின்படி அடுக்கி வைப்பதற்கு தேவையான இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு ஏதுவாக ஊடக மையத்திற்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆய்வு ெசய்தார். வாக்கு எண்ணும் பணியில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கென தனித்தனியே தடுப்புகள் அமைக்கப்பட்டு, அவர்கள் சென்று வர அமைக்கப்பட்டுள்ள இரும்பு வலைகள், பாதைகள், வாக்குப்பதிவு எந்திரம் வைப்பு அறையில் அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகள் கூடுதல் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளதையும், வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்கு பெறவுள்ள முகவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்திய வாக்குப்பதிவு எந்திரங்கள், தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வைப்பு அறைக்கு கொண்டு செல்லும் வகையில் வரவேற்பறை அமைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியே வழித்தடங்கள் அமைத்து, எளிதான வகையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் குறித்தும் பார்ைவயிட்டார்.
கொரோனா தொற்றின் காரணமாக வாக்கு எண்ணும் நிகழ்வில் பங்கேற்க உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும், உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்வதற்கும், கிருமி நாசினி மற்றும் சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர், தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) ராஜராஜன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story