இணையதளத்தில் தேர்தல் களத்தை தெறிக்கவிடும் ‘மீம்ஸ்’கள்


இணையதளத்தில் தேர்தல் களத்தை தெறிக்கவிடும் ‘மீம்ஸ்’கள்
x
தினத்தந்தி 31 March 2021 1:59 AM IST (Updated: 31 March 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

இணையதளத்தில் தேர்தல் களத்தை ‘மீம்ஸ்’கள் தெறிக்க விடுகின்றன.

திருச்சி,

இணையதளத்தில் தேர்தல் களத்தை ‘மீம்ஸ்’கள் தெறிக்க விடுகின்றன.

சட்டமன்ற தேர்தல்

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரசார களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை கவர டீக்கடைகளில் டீ போட்டு கொடுப்பது, கோலாட்டம் ஆடுவது, கிரிக்கெட் விளையாடுவது என பல்வேறு விதமான உத்திகளை கையாண்டு வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, வாக்காளர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

மேலும் கொடிகளுடன் கட்சியினர் புடைசூழ மேளதாளங்கள் முழங்க தொண்டர்களின் குத்தாட்டத்துடன் பொதுமக்களை சந்தித்தும் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

சமூகவலைத்தள பதிவுகள்

இது ஒருபுறம் என்றால் சமூக வலைத்தளங்களிலும் தேர்தல் பிரசார வீடியோக்கள், வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், வாக்குகளை குறிவைக்கும் விளம்பரங்கள் என்று களைகட்டுகிறது. ஒரு கட்சியினரை பற்றி மற்றொரு கட்சியினர் குறைகூறுவது, தலைவர்களின் பேச்சுகளை கிண்டலடித்தும், கேலி செய்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போன்றவற்றுக்கும் குறைவில்லை. அதில் சில பதிவுகள் முகம் சுளிக்க செய்வதாகவும், சில பதிவுகள் சிந்திக்க ைவப்பதாகவும் உள்ளன.

சில பதிவுகளில் இருகட்சிகளின் ஆதரவாளர்கள் தங்கள் கட்சியை பற்றி உயர்வாகவும், மற்றொரு கட்சியை பற்றி தாழ்வாகவும் பதிவிடுவதும், அது தொடர்பாக பலர் கருத்து மோதல்களில் ஈடுபடுதும், குழாயடி சண்டைகளை நமது கண்முன்னே கொண்டு வருவது போன்ற காட்சியாகிவிடுகிறது.

கவனத்தை ஈர்க்கும் ‘மீம்ஸ்’கள்

இதையெல்லாம் விட மேலாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது ‘மீம்ஸ்’கள்தான். அதிலும் தேர்தல் நேரம் என்பதால் அது தொடர்பான ‘மீம்ஸ்’கள் அதிக அளவில் பதிவிடப்படுகின்றன. அதில் பல மீம்ஸ்கள் சிரிக்க வைப்பதாகவும், சில ‘மீம்ஸ்’கள் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளன. அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் முதல் வேட்புமனுவுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் வரை பல்வேறு வகையான மீம்ஸ்கள் இணையதளத்தில் உலவுகின்றன.

அதில் பல மீம்ஸ்கள் கவனம் ஈர்க்கின்றன. அவற்றில் ஒன்றில் குடும்ப தலைவிகளுக்கு ஊக்கத்தொகை தொடர்பான அறிவிப்பை மேலே பதிவிட்டு, அதன்கீழ் ‘அப்போ ஆண்கள் ஓட்டு எல்லாம் உங்களுக்கு வேண்டாமா?, என்று ஆண்கள் கேட்பது போன்றும், ‘குடும்ப தலைவிக்கு நாங்க எங்க போறது’ என்று 90’ஸ் கிட்ஸ் எனப்படும் திருமணமாகாத ஆண்கள் கேட்பது போன்றும் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டுள்ளன. மற்றொரு மீம்ஸ்சில் ‘ஏன் தலைவரே அவன அடிக்கிறீங்க? என்ற கேள்விக்கு, ‘தொகுதிக்கு போய் பிரசாரம் பண்ண சொன்னால், வெயில் அதிகமாக அடிக்கிறது, ஒர்க் பிரம் ஹோம் பண்ணட்டுமானு கேட்கிறார்? என்று அளிக்கப்பட்டுள்ள பதில் படிப்பவர்களை சிரிக்கச்செய்யும் ரகம்.

சிரிக்கவும், சிந்திக்கவும்...

மற்ெறான்று ‘ஒரு மாசம் மழை, வெயில் என்று பார்க்காமல் அலைந்து, திரிந்து கஷ்டப்பட்டால் போதும், 5 வருடம் ஏ.சி.யிலேயே வாழலாம். அவ்வளவு லாபம் தரும் தொழில் அரசியல்’ என்பது போன்ற சுளீர் கருத்துக்களை கொண்டதாக உள்ளது. 

முக கவசம் அணிந்தால் மட்டுமே ஓட்டுப்போட அனுமதி என்பதற்கு, ‘முகத்தை பார்த்து ஓட்டு போடும்போதே கள்ள ஓட்டு போடுவாங்க, இதுல இது வேறயா...’ என்ற மீம்சும், ‘மறுபடியும் ஊரடங்கு போடப்போறாங்க, கையில் காசு இருக்காது, எந்த கட்சிக்காரங்க வந்தாலும் காசு வாங்கிடுங்க, யார் வந்து கேட்டாலும் உங்களுக்குத்தான் ஓட்டு போட்டோம்னு சொல்லிடணும்’ என்ற மீம்சும், ‘அதுதான் வீட்டுக்கு ஒருத்தருக்கு அரசு வேலை சொல்லிட்டாங்களே, அப்புறம் எதுக்கு அரசு வேலைக்கு படிச்சிக்கிட்டு, போய் விளையாடுங்க போங்க’ என்ற மீம்சும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதாக உள்ளன.

தெறிக்க விடுகின்றன

தேர்வறையில் ஒரு மாணவரின் விடைத்தாளை பார்த்து மற்றொரு மாணவர் ‘காப்பி’ அடிப்பது போன்று ஒரு தலைவர் எழுதும் தேர்தல் அறிக்கையை மற்றொரு தலைவர் பார்த்து எழுதுவது போன்ற மீம்ஸ்சும், தேர்தலையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டு பணத்தை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் குழுவை கலாய்த்து, ‘தேர்தல் வந்துவிட்டால் போதும் சின்ராசுவை கையிலேயே பிடிக்க முடியாது’ என்பது போன்ற மீம்சுகளும் வேறு ரகம்.

மேலும் தலைவர்களின் சொத்து விவரம் தொடர்பாக, ‘இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு’, ‘பாவம் தலைவர், சைக்கிள் கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்’, ‘கட்டிட ேவலைக்கு சென்றாலே மாதம் ரூ.12 ஆயிரம் கூலி கிடைக்குமே?' என்பது போன்ற மீம்சுகளும் கவனம் ஈர்க்கின்றன. மொத்தத்தில் இணையதளத்தில் பதிவேற்றப்படும் தேர்தல் ெதாடர்பான மீம்சுகள் தேர்தல் களத்தை தெறிக்க விடுவதாக உள்ளன.

Next Story