மீண்டும் வேகமாக பரவுகிறது: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா 2 கடைகளை மூடி மாநகராட்சி நடவடிக்கை


மீண்டும் வேகமாக பரவுகிறது: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா 2 கடைகளை மூடி மாநகராட்சி நடவடிக்கை
x
தினத்தந்தி 30 March 2021 8:29 PM GMT (Updated: 30 March 2021 8:29 PM GMT)

திருச்சியில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 2 கடைகள் மூடப்பட்டன.

திருச்சி, 
திருச்சியில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 2 கடைகள் மூடப்பட்டன.

கொரோனா 2-வது அலை

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வாரம் தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட அளவில் 10 பேருக்கும் உள்ளாகவே இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

காய்ச்சல் பரிசோதனை முகாம்

கொரோனாவை தடுப்பதற்காகவும், அதனை கட்டுப்படுத்துவதற்காகவும் திருச்சி மாநகராட்சி சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் வார்டு வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. காந்தி மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 300 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டது.

5 பேருக்கு கொரோனா

இதில் 5 பேரின் சளி மாதிரிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த 5 பேரையும் கண்டறிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதையடுத்து அவர்களில் 4 பேர் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் என்பதும் ஒரு நபர் பொதுமக்களில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.

2 கடைகள் மூடப்பட்டன

இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வியாபாரிகள் நடத்தி வந்த 2 காய்கறி கடைகளையும் உடனடியாக பூட்டி சீல் வைத்தனர். மற்ற 2 கடைகள் சாலையோர கடைகள் என்பதால் அவற்றை அப்புறப்படுத்தினர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த 4 பேரையும் வீட்டில் தனிமையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுரை கூறினார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் குடும்பத்துடன் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் மூடப்படுமா?

காந்தி மார்க்கெட்டை பொறுத்தவரை கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் பரவியபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டு ஜி கார்னர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்த பின்னரே திறக்கப்பட்டது. 

தற்போது காந்தி மார்க்கெட்டில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி வருகிறது.‌ வியாபாரிகள் யாரும் முகக்கவசம் அணிவது இல்லை என்ற புகார்களும் வருகின்றன. இதுபோன்ற நிலை தொடர்ந்தால் கொரோனா பரவலை தடுப்பதற்காக காந்தி மார்க்கெட் மீண்டும் மூடப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Next Story