போலீசார் வந்த கார் மற்றொரு காருடன் மோதல் 2 பேர் காயம்
தாராபுரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால் ஆகியோர் வந்தபோது அவர்களின் பாதுகாப்புக்கு போலீசார் வந்த கார் மற்றொரு காருடன் மோதியது. இந்த விபத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால் ஆகியோர் வந்தபோது அவர்களின் பாதுகாப்புக்கு போலீசார் வந்த கார் மற்றொரு காருடன் மோதியது. இந்த விபத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.
பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
இந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள கோவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் சென்றனர். அதன்படி பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படங்கள் வரைந்த ஒரு காரில் கட்சி நிர்வாகிகள் வந்தனர். இந்த காரை தொடர்ந்து வி.ஐ.பி. பாதுகாப்புக்கு செல்லும் போலீசாரின் காரும், இதற்கு பின்னால் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி மற்றும் அவினாசி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், சபாநாயகருமான தனபால் ஆகியோரின் காரும் வந்தன.
கார்கள் மோதல்
இந்த கார்கள் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை கடந்து திருப்பூர் -தாராபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தது. குப்பணங்கோவில் சுங்கச்சாவடி அருகே வந்த போது, கட்சி நிர்வாகிகள் இருந்த காரை ஓட்டி வந்த டிரைவர், அங்கிருந்த வேகத்தடையை டிரைவர் பார்த்ததும் திடீரென்று பிரேக் பிடித்தார். இதனால் அந்த கார் நிலை தடுமாறி, சாலையின் ஓரமாக வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதற்கிடையில் இந்த காரின் பின் பகுதியில் போலீசார் வந்த காரும் எதிர்பாராத விதமாக மோதியது. இதனால் கட்சிக்காரர்கள் வந்த காரும், போலீசார் வந்த காரும் சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த 2 போலீசார் காயமடைந்தனர். உடனே மற்றவர்கள் அவர்களை மீட்டு மற்றொரு வாகனத்தில் அழைத்து வந்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லேசான காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர்கள் இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றனர். இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story