ஓசூரில் இருந்து திருச்சிக்கு வேனில் கொண்டு சென்ற ரூ.5 கோடி சிக்கியது
வேனில் கொண்டு சென்ற ரூ.5 கோடி சிக்கியது
பனமரத்துப்பட்டி:
ஓசூரில் இருந்து திருச்சிக்கு வேனில் கொண்டு சென்ற ரூ.5 கோடி சிக்கியது.
வாகன சோதனை
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தொகுதி வாரியாக பறக்கும் படைகளும், நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவு ரோடு பகுதியில் நேற்று மதியம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் அன்புராஜ், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.5 கோடி
அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அதில் ரூ.5 கோடி இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அதனை எடுத்துச் சென்றவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், தனியார் வங்கிக்கு சொந்தமான அந்த பணத்தை ஓசூரில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். மேலும் ரூ.5 கோடியை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் உள்ளதா? என அதிகாரிகள் பரிசோதித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே வேனில் வந்த வங்கி ஊழியர்கள், வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து அவர்கள் பேக்ஸ் மூலம் உரிய ஆவணத்தை அனுப்பி வைத்தனர். அந்த ஆவணத்தை வேனில் வந்த ஊழியர்கள் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர்களிடம் காண்பித்தனர். இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் ரூ.5 கோடியை வேனுடன் விடுவித்தனர்.
ரூ.75 லட்சம்
மேலும் அயோத்தியாப்பட்டணம் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் அரூரில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு வங்கிக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.75 லட்சம் சிக்கியது. இதற்கு உரிய ஆவணங்கள் இருந்ததால், திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
...........
Related Tags :
Next Story