கருமந்துறையில் பரபரப்பு அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை நிலத்தகராறில் தந்தை, தம்பிகள் வெறிச்செயல்
அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
பெத்தநாயக்கன்பாளையம்:
கருமந்துறையில் நிலத்தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற தந்தை, தம்பிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அ.தி.மு.க. பிரமுகர்
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 70). இவருக்கு உண்ணாமலை, சின்னம்மாள் ஆகிய இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு சின்னத்தம்பி (44), ராஜேந்திரன் என 2 மகன்களும், 2-வது மனைவிக்கு முனியப்பன், சிவகுமார் என 2 மகன்களும் உள்ளனர். சின்னத்தம்பி அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.
இந்த நிலையில் அண்ணாமலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுத்து உள்ளார். மேலும் முதல் மனைவியின் மகனான சின்னத்தம்பி ½ ஏக்கர் புறம்போக்கு நிலம் வைத்திருந்ததாகவும், அந்த நிலத்தை அண்ணாமலை மற்றும் முனியப்பன், சிவகுமார் ஆகியோர் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என சின்னத்தம்பியிடம் கேட்டு வந்துள்ளனர். அதற்கு சின்னத்தம்பி மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வெட்டிக்கொலை
இதனிடையே நேற்று முன்தினம் இரவு சின்னத்தம்பி, அவரது மனைவி ராதா ஆகியோர் மொபட்டில் கருமந்துறை அத்திமடத்து வளவு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அண்ணாமலை, முனியப்பன், சிவகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து அவர்களை வழிமறித்தனர்.
மேலும் நிலம் தொடர்பாக தகராறு செய்தனர். தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து சின்னத்தம்பியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து கருமந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் கருமந்துறை போலீசார் விரைந்து சென்று சின்னத்தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அண்ணாமலை, முனியப்பன், சிவகுமார் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். நிலத்தகராறில் அ.தி.மு.க. பிரமுகரை, தந்தை, தம்பிகள் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் கருமந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story