உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் பணம்: வாகன சோதனையில் ரூ.81½லட்சம் பிடிபட்டது
சென்னை புறநகர் தொகுதிகளில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.81½ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி,
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்களை பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர் கிழக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாஸ்டர் ராஜ் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக முகமது ஆசிப் என்பவர் ஓட்டி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி கணக்கில் வராத ரூ.48.90 லட்சம் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெரம்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ஆந்திர கார்
ஆவடி அடுத்த பாலவேடு பகுதியில் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீதரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனர்.
காரில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்திய நாராயணா என்பவருக்கு சொந்தமாக உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஆவடி திருவேற்காடு கூட்டச் சாலை ராஜாங்குப்பம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரியா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த திருவேற்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடமிருந்து ரூ.67 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது.
உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 2 இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆவடி தாசில்தாருமான செல்வத்திடம் ஒப்படைத்தனர்.
வேனை மறித்து சோதனை
மேலும், சென்னையை அடுத்த ஆலந்தூா் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆலந்தூர் தொகுதி பறக்கும் படை அதிகாரியான ராஜேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே சென்ற வேனை பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதித்ததில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 28 லட்சத்து 4 ஆயிரம் 875 பணம் இருந்தது தெரிய வந்தது.
அதை பறிமுதல் செய்து, ஆலந்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி உத்தரவின் பேரில், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வளசரவாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் செல்வகுமார் என்பவரிடம் கணக்கில் வராத ரூ.1.44 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பனிபுரிவதாகவும் அந்த சினிமா நிறுவனத்தின் பணம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தைஅதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஆக மொத்தம் நேற்று மட்டும் சென்னை புறநகர் தொகுதிகளில் உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.81½ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்துள்ளனர்.
Related Tags :
Next Story