அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி
அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்.
கரூர்,
கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று வையாபுரி நகர், செங்குந்தபுரம், கே.வி.பி. நகர், காமராஜபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பெண்கள் அவருக்கு மலர்தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க.வின் முதலீடே பொய்தான். மக்கள் அதை நம்ப வேண்டாம். பொதுமக்களுக்கு ஜெயலலிதாவின் அரசுதான் பாதுகாப்பான அரசு.
அ.தி.மு.க. அரசு மீண்டும் அமையும். அப்போது நெரூர்-ஒருவந்தூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டப்படும். இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செல்லாண்டிபாளையம் - சின்ன ஆண்டாங்கோவில் குறுக்கே அமராவதி ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பள்ளி- மேலப்பாளையம் இடையே அமராவதி ஆற்றில் புதிதாக கதவணை அமைத்து வலதுகரை, இடதுகரை வாய்க்கால்களில் விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து செயல்படுத்திய அரசு அ.தி.மு.க. அரசு தான். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story